ரஜினியின் 2.ஓ க்ளைமாக்ஸே எடுத்தாச்சு!

ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் மெகா பட்ஜெட் படமான 2.ஓ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ 350 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் எந்திரனின் தொடர்ச்சியான 2.ஓ படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த 45 நாட்களாக டெல்லியில் கடும் வெயிலுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதில் ரஜினி – அக்ஷய் மோதும் சண்டைக் காட்சிகள், எமி ஜாக்ஸன் – ரோபோக்கள் பங்கேற்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டன.

இவைதான் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த காட்சிகளைப் படமாக்குவது பெரும் சவாலாக இருந்திருக்கிறது ஷங்கருக்கும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கும். உயரத்தில் படம்பிடித்துக் கொண்டிருந்த ஒரு ஹெலிகேம் கீழே விழுந்து உடைந்துவிட்டதாம்.

ஆனால் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக ஷங்கர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். டெல்லி ஷெட்யூலை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளது படக்குழு. அடுத்து 10 நாட்களுக்கு செம்பரம்பாக்கம் அருகில் உள்ள ஈவிபி பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் படப்பிடிப்பு நடக்கிறது.

டெல்லியில் எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸூடன் தொடர்புடைய காட்சிகளை இங்கு படமாக்கவிருக்கிறார்கள். அதன் பிறகுதான் வெளிநாட்டுக்குச் செல்வார்கள் என்று தெரிகிறது.

Related Posts