தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘கபாலி’ படம் வசூலில் பெரும் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில், ரஜினியின் டுவிட்டர் அக்கவுண்டை மர்ம நபர்கள் முடக்கிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஜினி டுவிட்டரில் இணைந்தார். சேர்ந்த ஒரேநாளில் சுமார் 10 லட்சம் பேர் வரை இவரைப் பின்தொடர்ந்து டுவிட்டரையே ஸ்தம்பிக்க செய்தனர். 3 ஆண்டுகளில் இவரது டுவிட்டர் பக்கத்தை தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது.
இந்நிலையில் ரஜினியின் டுவிட்டர் பக்கத்தை நேற்று யாரோ மர்ம நபர்கள் முடக்கினர். ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ரஜினியின் டுவிட்டர் பக்கம் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது. இதுகுறித்து ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் கூறும்போது, “அப்பாவின் டுவிட்டர் அக்கவுண்ட்டை முடக்கம் செய்தவர்களிடமிருந்து மீட்டு விட்டோம். தற்போது இயல்பு நிலையில் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி” என தெரிவித்திருக்கிறார்.
ரஜினி டுவிட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.