ரஜினியை வைத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் ஷங்கர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
எந்திரன் படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்திருந்தார். ரூ 375 கோடியை இந்தப் படம் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வெளிநாடுகளில் இன்று வரை அதிக வசூல் குவித்த தமிழ்ப் படம் எந்திரன்தான். இந்தப் படம் இந்தியிலும் தெலுங்கிலும் வெளியானது. தெலுங்கில் ரூ 45 கோடியைக் குவித்தது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாகத் தயாராகும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தனர். ஆனால் ரஜினியின் உடல் நிலை காரணமாக அது தொடங்கவில்லை.
இந்த நிலையில் ஆமீர்கானை வைத்து ரோபோ இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார் ஷங்கர் என்று கூறப்பட்டது. இதற்கான பேச்சுகளும் நடந்தன. ஆனால் இதில் ரஜினியும் நடிப்பார் என்றார்கள்.
இந்த நிலையில் ரோபோ இரண்டாம் பாகத்தின் முழு கதையும் தயார் நிலையில் உள்ளதாகவும், ரஜினியின் நாயகன் என்றும் ஷங்கர் கூறியதாக செய்திகள் வெளியாகின.
படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வரும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என்றும் அவர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷங்கரே இதனை ஹைதராபாதில் தெரிவித்ததாக அதில் தெரிவித்திருந்தனர்.