மலாய மக்கள், சீனர், தமிழர் மற்றும் பல நாட்டவர்களின் கலவையான மலேசியாவில் எந்த நாட்டு பிரதமர், அதிபர் அல்லது எத்தனை பெரிய நடிகர் வருகை தந்த போதும், அந்த மக்கள் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.
தங்கள் பக்கத்தில் எத்தனைப் பிரபலம் நடந்து போனாலும் அந்த மக்கள் கண்டு கொள்வதில்லை. அல்லது ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அத்தனை ஆர்வம் காட்டியதில்லை. ஏதேனும் கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடந்தால் மட்டும் போய் பார்ப்பது வழக்கம்.
ஆனால் முதல் முறையாக அந்த மக்கள் இன மொழி பேதமின்றி ஒரு மனிதரை அலையெனத் திரண்டு வரவேற்கிறார்கள். மலேசியாவில் அவர் எங்கே போனாலும் அவருடனே பயணிக்கிறார்கள். காலில் விழுந்து வணங்குகிறார்கள். கையைப் பற்றிக் கொள்கிறார்கள். முத்தமிடுகிறார்கள். செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள்… உடம்பு முழுவதும் அவர் உருவத்தைப் பச்சைக் குத்திக் கொண்டு வந்து அழுதபடி அவரிடமே காட்டுகிறார்கள். அவர் கை தங்கள் தலைமீது பட வேண்டும் என தவம் கிடக்கிறார்கள். அவர் எந்த ஹோட்டலில் தங்கினாலும், அந்த ஹோட்டல் வாசலிலேயே நாள் கணக்கில் நிற்கிறார்கள், அவரைத் தொட்டுப் பார்த்ததும் கடவுளே நான் பிறந்த பலனை அடைந்துவிட்டேன் என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.
அவர் நம்ம ரஜினிகாந்த். தி ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்! இந்த மனிதருக்காகத் திரளும், இவர் மீது மக்கள் காட்டும் பாசத்தைக் காட்டும் தன் நாட்டு மக்களைத் திகைப்போடு பார்க்கிறது மலேசியா.
அந்த நாட்டுத் தலைவர்களும், அதிகாரிகளும் இந்த மனிதர் ஒட்டு மொத்த மக்களையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் ரகசியம் என்னவென்று பேசிக் கொள்கிறார்கள்.
மலேசிய, சிங்கப்பூர் மீடியாக்களில் தினசரி ரஜினி பற்றிய செய்திகள்தான். அவரும் ரசிகர்களைச் சந்திக்க சிறு தயக்கமோ, சலிப்போ காட்டவில்லை. ஷூட்டிங்குக்கு கிளம்பும்போதும் சரி. ஷூட்டிங் முடிந்து வரும்போதும் சரி, படப்பிடிப்பு இளைவேளையிலும் சரி.. கிடைக்கிற நேரங்களில் ரசிகர்களைப் பார்த்து கையசைக்கிறார், கும்பிடுகிறார்.. முடிந்தால் பேசி, ஆட்டோகிராப் போட்டுக் கொடுக்கிறார்.
தனது செக்யூரிட்டிகளுக்கு அவர் போட்டிருக்கும் கண்டிப்பான உத்தரவு, ‘ரசிகர்களைத் தடுக்கவோ, தள்ளிவிடவோ வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அமைதியாக அவர்களை அனுமதியுங்கள்’ என அனைவர் முன்னிலையும் அட்வைஸ் பண்ணுகிறார். தன்னைப் பார்க்க கண்ணீருடன் ஓடிவந்த பெண்ணைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொல்லி, அவரை ஆசுவாசப்படுத்தி படம் எடுத்துக் கொடுக்கிறார்.
சமூக வலைத்தளங்களான ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்ஆப்பிலும் மணிக்கு இதுசம்பந்தமாக பல நூறு போட்டோக்கள் வெளியாகி, பார்க்கும் ரசிகனை பரவசத்தில் ஆழ்த்துகின்றன.
“இந்த மாதிரி ஒரு வரவேற்பை மலேசியாவில் எந்த தலைவரும் பெற்றதில்லை… எந்த நடிகருக்கும் கிடைத்ததுமில்லை. ரஜினிகாந்த்திடம் நிச்சயம் மிகப் பெரிய ஈர்ப்புச் சக்தி உள்ளது,” என்று ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது.
“தலைவர் என்றால் ரஜினி என்கிறார்கள். அது உண்மை என்பதை நேரில் பார்த்துவிட்டேன்,” ஒரு மலேசிய அரசியல் தலைவர் சொன்னதாக பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
ரஜினி இன்னும் 40 நாட்கள் வரை மலேசிய உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் தங்கியிருக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
மலேசியாவில் இன்னும் சில தினங்களில் தேர்தல் வைத்து, அதில் ரஜினியைக் களமிறக்கினால் அபாரமாக ஜெயித்து பிரதமராகிவிடுவார் என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கின்றன மலேசிய மீடியாக்கள்!