ரஜினிக்கு ஏற்றவாறு கதை அமைந்தால் கண்டிப்பாக அவரை இயக்குவேன்: எஸ்.எஸ்.ராஜமௌலி

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஏப்.28-ந் தேதி வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை இந்திய சினிமா படைத்த அனைத்து சாதனைகளையும் இந்த படம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது. விரைவில், இப்படத்தின் வசூல் ரூ.1000 கோடியை எட்டவிருக்கிறது.

இந்நிலையில், எஸ்.எஸ்.ராஜமௌலியும், ரஜினியும் இணைவார்களா? என்ற ஒரு பேச்சு சினிமா வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே எஸ்.எஸ்.ராஜமௌலி, ரஜினியிடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளதாக தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

மறுபடியும் அதேகேள்வி ராஜமௌலி முன் வைக்கப்பட்டபோது அவர் கூறியதாவது: ரஜினியை வைத்து படம் பண்ணுவது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அவருக்கென்று சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்து உள்ளது. அவருக்கேற்ற கதை அமைவது மிகவும் கடினம். அந்தமாதிரி ஒரு கதை எனக்கு அமைந்தால் என்னைவிட இந்த உலகத்தில் பெரிய மகிழ்ச்சியான ஆள் இருக்கவே முடியாது. ரஜினிக்கேற்றவாறு கதை அமைந்தால் கண்டிப்பாக அவரை வைத்து படம் இயக்குவேன் என்று தெரிவித்தார்.

ரஜினியும் சமீபத்தில் ராஜமௌலியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். எல்லாம் சரியாக கூடிவந்தால் ரஜினி – ராஜமௌலி இணையும் மெகா கூட்டணியை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Related Posts