ரஜினிகாந்தையும் கவர்ந்த ‘ஜோக்கர்’

தமிழ்த் திரையுலகத்தில் எப்போதாவது ஒரு முறைதான் இப்படி ஒரு படம் வருவதுண்டு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படம் ‘ஜோக்கர்’. இந்தப் படத்தில் நடித்தவர்கள் யாரையும் இதற்கு முன் பார்த்த ஞாபகம் கூட திரைப்பட ரசிகர்கள் யாருக்கும் இருக்காது. இந்தப் படத்தில் நாயகனாக நடித்த குரு சோமசுந்தரம் இதற்கு முன் ‘ஜிகர்தண்டா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இவருடைய ஜோடியாக நடித்த ரம்யா பாண்டியன் கடந்த வருடம் வெளிவந்து உடனே ஓடிப் போன ‘டம்மி டப்பாசு’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். நட்சத்திர வெளிச்சம் இல்லாத இவர்களை இன்று வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள படம் ‘ஜோக்கர்’.

படத்தைப் பார்க்கும் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் படத்தைப் பற்றி பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகில் தற்போது அரசியல் சார்ந்த படங்களை எடுக்கும் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அனைவருமே பேய்ப் பக்கமும், காதல் பக்கமும் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிலிருந்து விலகி ஒரு பொறுப்பான படத்தை எடுத்து அனைவரையும் பேச வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன் என பலதரப்பிலிருந்தும் அவருக்குப் பாராட்டுக்கள் வந்து கொண்டேயிருக்கிறது.

அந்தப் பாராட்டுக்களின் பட்டியலில் தற்போது ரஜினிகாந்தும் சேர்ந்துள்ளார். படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவுக்கு போன் செய்து படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். ‘ஜோக்கர்’ படத்திற்கு நாளுக்கு நாள் பாராட்டுக்கள் குவிந்து கொண்டே வருகிறது.

Related Posts