ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்: அமீர்கான்

இந்தி நடிகர் அமீர்கான் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“எனது படங்கள் வசூல் குவிப்பதாகவும், நல்ல கதைகள் எனக்கு அமைவதாகவும் பலரும் பேசுகிறார்கள். நான் கதை தேர்வில் கவனமாக இருக்கிறேன். டைரக்டர்கள் கதை சொல்லும்போது ஒரு ரசிகன் மாதிரி கேட்பேன். எனக்குள் இருக்கும் அந்த ரசிகனை கதை திருப்தி செய்தால் உடனே நடிக்க ஒப்புக்கொள்வேன். அதுமட்டுமன்றி டைரக்டர்களும் என்னை மனதில் வைத்து கதை எழுதுகிறார்கள். அதனால்தான் நல்ல படங்கள் அமைகின்றன.

ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடலை கூட்டவும் குறைக்கவும் செய்து தோற்றத்தை மாற்றி நடிக்கிறேன். இப்படியெல்லாம் உடம்பை வருத்தி நடிக்க வேண்டாம் என்று எனது மனைவியும், தாயும் கடுமையாக கண்டிக்கிறார்கள்.

உங்களை வெவ்வேறு தோற்றங்களில் பார்த்து ஒரிஜினல் உருவம் மறந்து விட்டது என்று என் மனைவி கூறுகிறார். நான் விருதுகள், வசூல் என்று கவனம் செலுத்துவது இல்லை. ரசிகர்கள் இதயத்தை எனது படங்கள் தொட்டால் போதும்.

ரஜினிகாந்தை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரது தீவிர ரசிகன். ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன். தெலுங்கில் சிரஞ்சீவி, பவன்கல்யாண் ஆகியோருடன் நடிக்க ஆசை. தெலுங்கு டைரக்டர் ராஜமவுலி திறமையானவர். ஒவ்வொரு படத்தையும் பிரமாண்டமாக எடுக்கிறார். விரைவில் மகாபாரதம் கதையை அவர் படமாக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அந்த படத்தில் நடிக்க விரும்புகிறேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன், கர்ணன் இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தவர். சிறந்த போர் வீரர். அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது சிரமம், கிருஷ்ணர் கதாபாத்திரம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ராஜமவுலி வாய்ப்பு தந்தால் நடிப்பேன்.”

இவ்வாறு அமீர்கான் கூறினார்.

Related Posts