ரசிகர்களுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

கடந்த சில ஆண்டுகள் வரை தனது பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.

சில காரணங்களால் இந்தச் சந்திப்பை திடீரென்று நிறுத்திக் கொண்டார். ரசிகர்களின் சந்திப்பைத் தவிர்ப்பதற்காகவே தனது பிறந்த நாள் உள்ளிட்ட விழாக்காலங்களில் சென்னையில் இருப்பதை ரஜினிகாந்த் தவிர்த்தார்.

இருந்தும் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட தினங்களில் ரசிகர்கள் ரஜினியின் போயஸ் தோட்ட இல்ல வாயிலில் காத்திருப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

சில நேரங்களில் ரஜினிகாந்த் வீட்டில் இல்லை என்பதை தெரிந்துகொண்டு ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பிறந்த நாளில் போயஸ் தோட்ட இல்லத்தில் கூடியிருந்த ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து விழாக்காலங்களில் ரசிகர்கள் கூட்டம் மீண்டும் அதிகமானது.

இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான வெள்ளிக்கிழமை ரஜினியின் போயஸ் தோட்ட வாசலில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். “கபாலி’, “எந்திரன்’ இரண்டாப் பாகமான “2.0′ ஆகிய படப்பிடிப்புகளில் தீவிரமாகப் பங்கேற்று வரும் ரஜினிகாந்த் புத்தாண்டை ஒட்டி வீட்டில் இருப்பதை தெரிந்த ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் ரஜினிகாந்தை சந்திப்பதற்காக காத்திருந்தனர்.

போயஸ் தோட்ட இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி அளவில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் திடீரென வெளியே வந்த ரஜினிகாந்த தனது வழக்கமான பாணியில் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி வணக்கம் செலுத்தினார். பின்னர், ரசிகர்களைப் பார்த்து கையசைத்து அவர்களது புத்தாண்டு வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.

சுமார் 1 நிமிஷம் 20 நொடிகள் அங்கிருந்த ரஜினிகாந்த் பின்னர் வீட்டுக்குள் சென்றார். பின்னர் ரஜினியைச் சந்தித்த மகிழ்ச்சியில் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர்.

Related Posts