கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ கடந்த 11ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. தெலுங்கு ரீமேக்கான ‘சாஹசம் சுவாசகா சாகிப்போ’வும் அதே தினத்தில் வெளியாகியது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிப் படங்களுமே இளம் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டு ரசிக்கப்படுகிறது. கடந்த மூன்று தினத்தில் மட்டும் தமிழ்ப் படம் சுமார் 10 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என்கிறார்கள். பணத் தட்டுப்பாடு இல்லையென்றால் இந்த வசூல் தொகை இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே, இப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் நேற்று சென்னையில் உள்ள சத்யம் தியேட்டருக்குச் சென்று தன்னுடைய பாடல்களுக்கு ரசிகர்கள் எப்படிப்பட்ட வரவேற்பைத் தருகிறார்கள் என்பதை நேரில் பார்த்தார். படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘தள்ளிப் போகாதே…’ பாடல் திரையில் வந்த நேரத்தில் அவர் அதை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருப்பதை சமூக வலைத்தளம் வாயிலாக நேரடியாகவும் வழங்கினார்.
ஏ.ஆர்.ரகுமான் – கௌதம் மேனன் – சிம்பு கூட்டணியில் வந்துள்ள இந்தப் படம் மீது ரகுமான் தனி கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பீப் சாங்’ சர்ச்சை எழுந்த போது கூட சிம்பு மீதான கவனத்தை திசை திருப்பும் வகையில் ‘தள்ளிப் போகதே…’ பாடலின் சிங்கிளை அவர் வெளியிட்டார். ஏ.ஆர்.ரகுமான், சிம்புவின் அப்பா டி.ராஜேந்தரிடம் இசைக் கலைஞராக ஒரு காலத்தில் பணியாற்றியவர்.
ஏ.ஆர்.ரகுமானின் நேற்று தியேட்டருக்குச் சென்று பார்த்ததை அவர் நேரடி ஒளிபரப்பு செய்ததையே சமூக வலைத்தளத்தில் சுமார் 75,000க்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். இது படத்தின் பிரமோஷனுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை தான் இசையமைத்த படங்களுக்கு ரகுமான் இப்படி தியேட்டர் விசிட் செய்ததில்லை. ரகுமானைத் தியேட்டரில் பார்த்த ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்ததாம்.