ரங்கண ஹேரத்திற்கு எதிராக ஆடுகளம் வடிவமைத்த ஊழியருக்கு பிளஸிஸ் நன்றி!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹேரத்தின் பந்து வீச்சு எடுபடாதவகையில் ஆடுகளத்தை வடிவமைத்துக் கொடுத்த மைதான ஊழியர்களுக்கு தென் ஆபிரிக்க அணித்தலைவர் பிளஸிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி ஆரம்பித்து போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 206 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது.

இந்திய தொடரின் போது சுழற்பந்து வீச்சில் நிலைகுலைந்து போன தென் ஆபிரிக்கா இலங்கை அணியுடனான இந்த போட்டியில் மிகுந்த கவனம் செலுத்தியது.

குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஹேரத் சிறப்பாக பந்து வீசுவார் என்பதால் ஹேரத்திற்கு எவ்வகையிலும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்பதில் கவனம் செலுத்தியது.

அதற்கேற்ப டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையாத ஆடுகளம் அமைக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிளஸிஸ் ”ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடாத வகையில் தயார் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதன்படி அவர்களும் ஆடுகளத்தை தயார் செய்தனர். இதனால் அவர்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Posts