யோஷித ராஜபக்ஷவின்வின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கும் தீர்ப்பை நீதிவான் தம்மிக ஹேமபால நேற்று அறிவித்த போது மன்றில் இருந்த ஷிரந்தி ராஜபக்ஷ கண்ணீர் விட்டு அழுதார். மஹிந்த ராஜபக்ஷவின் கண்களும் கலங்கியிருந்தன.
கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் லெப்டினன் யோஷித ராஜபக் ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் நேற்று கடுவலை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது அங்கு பெருந்திரளான பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் கூடியிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக் ஷ ஆகியோர் மன்றினுள் இருந்தவாறு வழக்கு நடவடிக்கைகளை அவதானித்ததுடன் அவர்களுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக் கார, உதய கம்மன்பில,டலஸ் அழகப் பெரும, கெஹெலிய ரம்புக்வெல்ல, உதித்த லொக்குபண்டார, சி.பி.ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
அத்துடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரும் கடுவலை நீதிவான் நீதிமன்றுக்கு நேற்று வருகை தந்தனர்.
யோஷிதவின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கும் தீர்ப்பை நீதிவான் தம்மிக ஹேமபால அறிவித்த போது மன்றில் இருந்த ஷிரந்தி ராஜபக்ஷ கண்ணீர் விட்டு அழுதார். மஹிந்த ராஜபக்ஷவின் கண்களும் கலங்கியிருந்தன.
இந் நிலையில் மன்றுக்கு வெளியே வந்த மஹிந்தவும் ஷிரந்தியும் காரில் ஊடகங்களிடம் கருத்து கூறாமலேயே சென்றனர். யோஷித்த உள்ளிட்டோரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டதை கேள்வியுற்ற மன்றின் வளாகத்தில் இருந்த பல யுவதிகள் கதறியழுததை அவதானிக்க முடிந்தது. மேலும் பலரும் இதன் போது கண்ணீர் விட்டனர்.
இதன் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி., பிள்ளைகளை பழிவாங்கி மஹிந்தவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட சிலர் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து நாமல் ராஜபக்ஷ ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் இந் நட்டில் முன்னர் பிரேமதாஸ, சந்திரிக்கா என பலரும் ஆட்சிச் செய்தனர். பிரேமதாஸவின் மகன் இன்றும் அரசியல் செய்கிறார். அவர்களின் காலத்திலும் சரி, இதற்கு முன்னரும் சரி அரசியல்வாதிகளின் பிள்ளைகளை பழிவாங்கும் கலாசாரம் இருக்கவில்லை.
தற்போது உள்ளக அரசியலில் அத்தகைய ஒரு கலாசாரத்தை நல்லாட்சி அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த கலாசாரம் தொடரக் கூடாது என பிரார்த்திக்கின்றேன். ஏனெனில் நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.
ராஜபக்ஷக்களை உள்ளே வைத்து தேர்தலை எதிர்கொண்டாலும் மக்கள் அவர்களது தீர்மானத்தையே வழங்குவார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. என்றார்.