வெலிக்கடைச் சிறைச்சாலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ள `ஜே’ விடுதிப் பகுதியில் கைத்தொலைபேசி நுண்அலைகளைத் தடுக்கும் கருவிகள் பொருத்தப்படவுள்ளன.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, சிறைக்கூடத்தில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதாக எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், யோஷித ராஜபக்ஷ தடுத்துவைக்கப்பட்டுள்ள ‘ஜே’ விடுதி அருகில் கிடந்த கைத்தொலைபேசி ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த கைத்தெலைபேசிய துரித விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், ‘ஜே’ விடுதிப் பகுதியில் ஏனையோர் நடமாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்தநிலையில், அந்த விடுதிப் பகுதியில் கைத்தொலைபேசிக்கான நுண்அலைகளைத் தடை செய்யும் கருவிகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன், சிறைச்சாலைகள் திணைக்களம் பேச்சுக்களை நடத்தியுள்ளது.