அரசின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே இந்த அழைப்பைத் தமக்கு விடுத்துள்ளார் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
தமிழ் உறவுகளைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுவிட்டு அரசு நடத்தும் இந்த யுத்த வெற்றிவிழாக் கொண்டாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கமாட்டார்கள் என்றும் சுரேஷ் எம்.பி. ஆவேசமாகக் கூறினார்.
கூட்டமைப்பினருக்கு கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (திங்கட்கிழமை) அனுப்பப்பட்டுள்ள மும்மொழிகளிலான அழைப்பிதழில்-
“சுதந்திர நாட்டின் உரிமையை, சுதந்திர தேசத்தின் அழகினை, சுதந்திர உள்ளத்தின் மகிமையை இலங்கை நாட்டின் இளைய தலைமுறையினருக்கு மீட்டுத் தந்த வெற்றித் தருணத்தின் தளபதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு எதிர்வரும் மே 18ஆம் திகதி காலை 7.30 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க மாத்தறை நகருக்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று சுரேஷ் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்றுவந்த தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்களைத் தோற்கடித்த மே 18 ஆம் திகதியை போர் வீரர்களின் தினமாக இலங்கை அரசு கொண்டாடி வருகின்றது. கடந்த 5 வருடங்களாக மே மாதத்தைப் போர் வீரர்களின் மாதமாகப் பிரகடனப்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டு இலங்கை அரசின் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் மாத்தறையில் இடம்பெறவுள்ளன.
இதற்குரிய ஏற்பாடுகள் யாவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் என்பனவும் இந்த வெற்றி விழாவில் இடம்பெறவுள்ளன.
ஆனால், வடபகுதியிலுள்ள தமிழ் மக்கள், இறுதிப் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து பொது இடங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகள் நடத்துவதற்கு இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.