யுத்தத்தில் உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கு உதவிகள் இன்னும் இல்லை!

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வாழ்வாதார உதவிகளும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உதவிகளும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலைமை பின்தங்கிய பிரதேசமாகத் திகழும் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்திலேயே அதிகமாகக் காணப்படுகின்றது.

குறிப்பிட்ட அரச உதவிகள் கிடைத்துள்ள போதிலும் மாற்று வலுவுள்ளவர்கள் என அழைக்கப்படுகின்ற அங்கங்களை இழந்தவர்கள், பார்வையிழந்தவர்கள், ஆண் துணையற்ற நிலையில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்கள் என்பவற்றிற்கு, அந்தக் குடும்பங்களின் தன்மைகளுக்கு ஏற்ப, நிலைத்து நிற்கக் கூடிய உதவிகள் கிடைக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

தொண்டு நிறுவனங்களும் தனியார் பலரும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் வல்லமைக்கேற்ற வகையில் வழங்கி வருகின்ற உதவிகளை அவர்கள் நன்றியோடு ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அரசாங்கம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவயவங்களை இழந்தவர்கள் குறிப்பாக கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைத் தயாரித்து வழங்குவதில் பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன.

இவற்றின் உதவிகளினால், பாதிக்கப்பட்டவர்கள், செயற்கை அவயவங்களைப் பெற்றுக்கொள்ளவும், அவற்றை, காலத்துக்குக் காலம் திருத்திக்கொள்ளவும் வாய்ப்பு எற்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கங்களை இழந்தவர்களுக்கு விசேட கவனம் செலுத்தி உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் என்று அண்மையில் வடபகுதிக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியிருந்தது.

அந்தக் கோரிக்கையை ஏற்று, அங்கங்களை இழந்வர்களின் வாழ்வாதாரம் மற்றும் தேவைகள் குறித்து கவனிப்பதற்கென கிளிநொச்சியில் அலுவலகம் ஒன்று அமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts