யுத்தத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்தின் கல்வி செயற்பாடுகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அதனை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் 10 வருட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வட மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்திற்கு முன்னராக காலப்பகுதியில் வடக்கில் சிறப்பான கல்வி வளர்ச்சி காணப்பட்டது. சிறப்பான கல்வியை வழங்கும் மாவட்டங்களாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகியன காணப்பட்டது.
எனினும் யுத்தத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்தின் கல்வி வளர்ச்சி முற்றாக வீழ்ச்சியடைந்து பின்னடைவைச் சந்தித்து விட்டது. யுத்தத்தின் போது பாடசாலைகள் அழிக்கப்பட்டமை, ஆசிரியர்கள் வடக்கில் சேவையாற்ற விரும்பாமை உட்பட பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது .
இதன் காரணமாக வடக்கின் கல்வித் திட்டத்தினை மீண்டும் கட்டியெழுப்ப விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதனால் மக்களின் பொருளாதார மட்டத்தினையும் உயர்த்த முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.