யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப கூட்டமைப்பிற்கு றிசாட் அழைப்பு

யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப பேதங்களையும் மறந்து இணைந்து பணியாற்றுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர், பிரதிதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை கட்டியெழுப்பும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு எண்ணியிருந்தோம்.

அதன்படி தமிழ்- முஸ்லிம் நல்லுறவுக்கான பாலமாக புதிய ஆட்சியை மலரச் செய்வதற்காக கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தோம்.

எமது யோசனைக்கு செவிசாய்த்து ஆரம்பத்தில் இதற்கு சம்மதித்த கூட்டமைப்பினர், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான காலம் நெருங்கி வந்து கொண்டிருந்த போது, நாங்கள் வெற்றி பெற்ற சபைகளில் எங்களை வீழ்த்த வேண்டுமென்று செயலாற்றினார்கள்.

இந்நிலையில், இன, மத, பேதங்களுக்கு அப்பால் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றனர்.

அதன்படி அவரும், அவருடன் இணைந்தவர்களும் தமது பொறுப்பைச் சரியாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எதிர்க்கட்சியினர் உட்பட எல்லோரையும் இணைத்துக்கொண்டு பக்குவமாகப் பயணஞ்செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

மன்னார் பிரதேச சபையில் ஒரு கட்சி சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமை ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாகவே நான் கருதுகின்றேன். எதிர்காலத்தில் இந்த சூழ்நிலை மாற்றமடைய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts