யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்ற ரீதியில், அவர்களுக்குக் கரம்கொடுத்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றம்காண வழிவகை செய்யவேண்டும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
‘ஒரு காலத்தில் பெண்கள் கல்வி கற்கத் தடை, ஏனைய ஆடவர்கள் முன் பெண்கள் பேசுவதற்குத் தடை, பெண்கள் வேலைக்குப் போகத்தடை என்று பல தடைகள் போடப்பட்டிருந்தன. ஆனால் இன்று நிலைமைகள் எவ்வளவோ முன்னேற்றகரமாக மாறிவிட்டன. சம உரிமைகள் தரப்பட்டால் தம்மால் முடியாததொன்றில்லை என்பதைப் புரியவைத்து வருகின்றனர் பெண்கள். அவற்றை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும். பெண்கள் மீதான வன் எண்ணங்களை இனியாவது களைவது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்.
எனினும் போர் நடக்கும் இடங்களில், போர் நடந்து முடிந்த வலையங்களில் பெண்களது பாடு மிக மோசமாக அமைந்திருப்பதையும் நாங்கள் மறந்துவிடக்கூடாது. போர்க்காலப் பாதிப்பு பெண்களுக்கே மிகக் கொடூரமாக அமைகின்றது. அதேநேரம் சமாதான சூழலை ஏற்படுத்த முன்னிற்பவர்களும் பெண்கள்தான். இன்று போரானது, அதன் தார்ப்பரியமானது முற்றாகவே மாறிவிட்டது. கிராமங்களே போரின் உக்கிரத்தைத் தாங்கவேண்டிய இடங்களாக மாறியுள்ளன. அது மட்டுமல்லாமல் போரில் மடிந்துபோகின்றவர்கள் போர்வீரர்களே என்பதிலும் பார்க்க சாதாரண குடிமக்களேயாவார். அவர்களுள் பெரும்பான்மையினர் பெண்கள். அது மட்டுமல்லாமல் வன்புணர்வானது, போரின் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டு வருகின்றது.
இவை நேரடியான பாதிப்புக்கள் என்றால் மறைமுகமான பாதிப்புக்கள் பலவுள்ளன. உலக ரீதியான போர்ச் சூழலில் தமது நாளாந்த கடமைகளை பெண்கள் ஆற்றமுடியாது தத்தளிக்கின்றனர். பயத்தில் வீட்டினுள்ளேயே அடைபட்டுக் கிடக்க வேண்டிய நிலையுள்ளது. இவை குடும்ப ரீதியான பாதிப்புக்களைக் கொண்டு வருகின்றன.
ஆனால் உலகெங்கிலும் போரினால் பாதிப்படைந்த பல பெண்கள் சமாதானத்தை முன்கொண்டு செல்லும் சாரதிகளாகவும் செயற்பட்டு வருகின்றார்கள். தமது கணவன்மார்களை, சகோதரர்களை, மகன்மார்களைப் போரில் பறிகொடுத்த பல பெண்கள் அந்த ஆண்கள் வகித்த இடத்தைத் தாமேற்றுப் பொறுப்புடன் வாழ்க்கையை ஓட்ட முன்வந்துள்ளார்கள். இடிந்து போய் மூலையில் கிடக்க அவர்கள் முனையவில்லை.
பெண்களின் ஒற்றுமை, பெண்களின் ஒருங்கிணைப்பு, பெண்களின் ஒருமித்த கூட்டுச் செயல்கள் யாவும் பாதிப்புற்ற மக்களின் வாழ்க்கையை மறுமலர்ச்சி செய்யவல்லது என்பதைப் பெண்கள் மறந்து விடக்கூடாது.
பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிறைவேற்றக்கூடிய செயற்பாடுகளில் பெண்கள் இயக்கங்கள் இறங்க வேண்டும். எமக்கென்ன என்றோ, இது எமது வேலையில்லை என்றோ வாளாதிருக்கக்கூடாது. பாதிப்புற்ற பெண்கள் எந்த ஒரு தேவைக்கும் அரசாங்கத்தையோ, அரசசார்பற்ற நிறுவனங்களையோ சார்ந்திருக்காது தமது சொந்தக் கால்களில் நின்று முன்னேற்றம் காண முன்வரவேண்டும்.
எம்மிடையே போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி ஆராய்ந்தோமானால் கணவன்மார்களை இழந்து குடும்பப் பாரத்தைத் தாம் ஏற்ற இளம் பெண்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் எந்தவிதமான வசதிகளும் இன்று வாடி வதங்கி நிற்கின்றார்கள். போரினால் அங்கவீனமாக்கப்பட்ட பெண்கள் பலர் இருக்கின்றார்கள். புனர்வாழ்வு பெற்ற பின்னர் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பெண் போராளிகள் உள்ளார்கள். ஆனால் அவர்களில் பலரைச் சமூகம் வெறுத்தொதுக்கும் ஒரு நிலையும் உருவாகியுள்ளது.
இவ்வாறான பெண்களின் மேம்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும், ஏது செய்ய வேண்டும் என்று கூட்டம் கூடி சித்தித்துச் செயல்திட்டங்களை வகுப்பதே உங்கள் அனைவர் முன்னிலையிலும் இன்று இருக்கும் பாரிய சவால் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்தச் சவாலை ஏற்று பாதிப்புற்றோர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கொண்டுவர நாம் யாவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். பாதிப்புற்ற பெண்களின் விமோசனமானது அவர்களைச் சமூக நீரோட்டத்தில் மீண்டும் இணைத்துக் கொள்வதில்தான் தங்கியுள்ளது. அவர்களின் நேரத்தையும் காலத்தையும் ஏதோ ஒரு நன்மை பயக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுத்துவதன் மூலமே அவர்களின் மனச்சுமையை ஓரளவாவது குறைக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க நீங்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்’ என்றார்.