யாழ். வைத்தியசாலையில் கண் சிகிச்சை நிலையம் அமைக்க காணி ஒதுக்கீடு

யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சை நிலையமொன்றை அமைப்பதற்கு மாநகர சபைக்குச் சொந்தமான 7 பரப்புக் காணியை வழங்குவதற்கு மாநகர சபை உறுப்பினர்களின் ஒப்புதல் நேற்று புதன்கிழமை (20) பெறப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையின் மேற்குப் பகுதியில் உள்ள, பழைய மின்சார நிலையம் அமைந்துள்ள காணியையே இவ்வாறு கண் சிகிச்சை நிலையம் அமைப்பதற்கு மாநகர சபை வழங்கவுள்ளது.

இது தொடர்பில் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவிக்கையில்,

யாழ். போதனா வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினால் யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சை நிலையத்தினை அமைப்பதற்கு மாநகரசபைக்கு சொந்தமான காணியைத் தருமாறு ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கைதொடர்பில், சபை உறுப்பினர்களின் ஒப்புதல் இன்று புதன்கிழமை (நேற்று) பெறப்பட்டுள்ளது.

மேற்படி காணியில் டச்சுக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றும் இருப்பதாகவும், அது நினைவுச் சின்னமாகவிருப்பதால், அதனை அழிக்காமல் அதனுடன் இணைந்ததாக கண்சிகிச்சை நிலையத்தை அமைக்கும்படி, யாழ். போதனா வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என அவர் மேலும் கூறினார்.

Related Posts