‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்’ வல்வெட்டித்துறை பொலிகண்டி விளையாட்டு வீராங்கனைக்கு புதிய சம்மட்டி ஒன்றை கொட்டாவ விளையாட்டு விராங்கனை அன்பளிப்பு செய்து அன்பின் மகத்துவத்தை உணர்த்தும் இந்தத் திருக்குறளை மெய்ப்பித்துள்ளார்.
16 வயது பாடசாலை மாணவி ஒருவரின் இரக்கக் குணம் கொண்ட இந்த செயல் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
இந்த உணர்ச்சிபூர்வ, இரக்கக் குணம் கொண்ட நிகழ்வை கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியின்போது தியகம விளையாட்டரங்கில் காணக்கூடியதாக இருந்தது.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த செல்வகுமார் செவ்வானம் 30.76 மீற்றர் தூரத்திற்கு சம்மட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே போட்டியில் பங்குபற்றிய கொட்டாவ, பன்னிப்பிட்டிய வடக்கு தர்மபால மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சானுமி டில்தினி பெரேரா (21.33 மீற்றர்) ஏழாம் இடத்தைப் பெற்றார்.
செவ்வானமோ துண்டுக் கம்பிகளைப் பிணைத்து செய்யப்பட்ட சம்மட்டியைக் கொண்டே வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். சானுமி டில்தினி பெரேரா புதிய உயர் ரக சம்மட்டியைக் கொண்டு 7ஆம் இடத்தையே பெற்றார்.
பொலிகண்டி மாணவியின் திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்த சானுமி டில்தினி பெரேரா, தனது சம்மட்டியை அவருக்கு அன்பளிப்பு செய்ய தீர்மானித்தார்.
இது குறித்து பெற்றோரிடமும் பயிற்றுநரிடமும் தனது எண்ணத்தை வெளியிட்டார். அவரது தந்தை, ‘மகளே உன் விருப்பப்படி செய், உனக்கு நான் புதிய சம்மட்டி ஒன்றை வாங்கித்தருகிறேன்’ என்றார்.
இதனை அடுத்து செவ்வானத்தை நோக்கிச் சென்ற சானுமி டில்தினி பெரேரா தனது புதிய, உயர்ரக சம்மட்டியை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து எதிர்காலத்தில் வெற்றிவாகை சூடுமாறு வாழ்த்தினார்.
செவ்வானம் சானுமி டில்தினிக்கு நன்றி கூறியதுடன் இந்த உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்றார்.
உண்மையான அன்பையும் இரக்கக் குணத்தையும் யாராலும் அடக்கவும் முடியாது, மற்றையவரால் தடுக்கவும் முடியாது என்பதை 16 வயது பள்ளி மாணவி சானுமி டில்மினி பெரேரா இதன் மூலம் முழு இலங்கையருக்கும் உணர்த்தியுள்ளார்.
செல்வகுமார் செவ்வானத்திற்கு வி. ஹரிஹரனும் பாடசாலை பயிற்றுநர் நிதர்ஷனும் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.