யாழ்.வலிகாமம் வடக்கு இடம்பெயர் மக்களின் 23 வருடமாக தொடரும் அவல வாழ்வு!

vali_vadakkuயாழ்.வலிகாமம் வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாம் நிலச்சொந்தக்காரர்கள் முகாமை அங்கிருந்து அகற்றுமாறு தீவிரமான அழுத்தங்களை கொடுப்பதாக தெரிவித்துள்ள மக்கள் தாம் சொந்த இடங்களுக்கும் செல்லமுடியாமல், முகாம்களை விட்டும் வெளியேற முடியாமல் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலைமைகள் தொடர்பாக பல தரப்பினர்களுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

வலி வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாம்களிற்கு நேற்று விஐயம் மேற்கொண்ட வலிவடக்குப் பிரதேச சபையின் தவிசாளர். சோ.சுகிர்தன் மக்களது நிலைமைகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போதே தமது நிலைமைகள் தொடர்பாக மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

வலிகாமம் வடக்கிலிருந்து 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்து கடந்த 23 வருடமாக முகாம்களிலும் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளிலும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

45 கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் முகாம்களில் அடிப்படை வசதிகள் உட்பட எதுவித வசதிகளுமற்ற நிலையில் பெரும் அவல நிலையில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலைமைகள் தொடர்பாக பல தரப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்த நிலையில் இவர்களில் 26 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் படிப்படியாக மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

மேலும் அனைத்து மக்களும் மீளக்குடியமர்த்தப்படுவர் என எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு நடுப்பகுதியின் பின்னர் வலி. வடக்கில் மீள்குடியேற்றம் எதுவும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இங்கு தற்போது 24 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படாமல் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த 24 கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த 27000 ஆயிரம் மக்கள் இதுவரையில் மீளக்குடியமர்வதற்கு பிரதேச செயலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

ஆயினும் மீள்குடியமர்வுக்கு இதுவரையில் அனுமதிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் முகாம்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் முகாம்களின் காணி உரிமையாளர்கள் தற்போது தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வருகின்றனர்.

இதனால் தாம் அடுத்தகட்டமாக என்ன செய்வதென்றும் தமது நிலைமைகள் தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவதில்லை என்றும் கவலையுடன் தெரிவித்த மக்கள் தம்மை தமது சொந்த இடங்களி-ல் மீள்குடியமர்த்துவதற்கு அனைத்துத் தரப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் பின்னர் சுகிர்தன் கருத்து வெளியிடுகையில்…

வலி. வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து 23 வருடங்கள் ஆகிவிட்டன.ஆனாலும் தற்போதும் இவர்களது நிலங்கள் விடுவிக்கப்படாமல் இரானுவத்தின் உயர்பாதுகாபக்பு வலயமாக உள்ளது.

இதனால் கடந்த 23 வருடகாலமாக இந்த மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். 45 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட இப்பகுதியில் இவர்களில் 23 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் தற்போதுள்ள முகாம் காணிகளினது உரிமையாளர்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரி வருகின்றனர்.

இதனால் இந்த மக்கள் பெரும் நிர்க்கதி நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் இது தொடர்பில் இயன்ற நடவடிக்கையை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts