யாழ். வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கப்பம் கோரும் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு

Phoneயாழ்ப்பாண வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கப்பம் கோரும் சம்பவம் குறித்து வர்த்தகர்கள் முறைப்பாடு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம், குறித்த சம்பவம் குறித்துப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் கப்பம் கோரும் சம்பவம் குறித்து கடந்த இரு வாரங்களாக வர்த்தகர்கள் வணிகர் கழகத்திற்கு முறைப்பாடு கொடுத்துள்ளனர்.

அதில் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நபர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், வங்கிக் கணக்கு இலக்கத்தைக் கொடுத்து அந்த இலக்கத்திற்கு பணத்தை செலுத்துமாறு வற்புறுத்துவதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் விடயம் தொடர்பில் யாழ்.பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன், வர்த்தகர்கள் மூலம் பொலிஸில் முறைப்பாடும் கொடுத்துள்ளோம். இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் வர்த்தகர்களிடம் வாக்கு மூலங்களையும் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் வணிகர் கழகம் அவதானிப்புடன் உள்ளது. இதேபோன்று வேறு வர்த்தகர்களிடமும் கப்பம் கோரப்பட்டால், வெளிப்படையாக பொலிஸாரின் கவனத்திற்கும், வணிகர் கழகத்தின் கவனத்திற்கும் கொண்டுவரவேண்டும் என நாம் கேட்டுள்ளோம் என்றார்.

Related Posts