யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் நடைபெற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
”15ஆவது வருடமாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சி தொடர்ந்து மூன்று தினங்கள் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ‘வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வில், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக வல்லுனர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொருளாதார நிகழ்வாக நடைபெறவுள்ளது.
குறிப்பாகப் பிராந்தியத்தின் பொருளாதார ஆற்றல் மற்றும் செழிப்பான தொழில்துறை என்பன விரிவாகக் காட்சிப்படுத்தப்படும்.
300க்கும் மேற்பட்ட விற்பனை காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் நிர்மாணத்துறை, சுற்றுலாத்துறை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், கல்வி, வாகனம், விவசாயம், ஆடையுற்பத்தி, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை குறித்த கண்காட்சியில் கழிவு முகாமைத்துவ நிலையங்களை நிறுவியுள்ளோம். கண்காட்சி நடைபெறவுள்ள தினங்களில் உங்களிடம் உள்ள பிளாஸ்ரிக் கழிவுகளை கொண்டு வந்து ஒப்படைத்து பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க பங்களிப்பு செய்யும்படி கோருகிறோம் ” இவ்வாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.