மிருசுவில் பகுதியில் நபர் ஒருவரை உலக்கையால் அடித்துக்கொலை செய்த மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முருகேசு சத்தியநாதன் என்பவரே அவரது வீட்டில் வைத்து இவ்வாறு அடித்துக்கொலை செய்யப்பட்டவராவார்.
கொலை சம்பவத்தினை புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அதே இடத்தினைச் சேர்ந்த 3 நபர்கள் சாவகச்சேரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், மேற்படி வழக்கு நேற்று திங்கட்கிழமை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் தீர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த தீர்ப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு, முருகேசு சத்தியநாதனின் வீட்டிற்கு சென்ற மூவரும், அவரை உலக்கையால் தலையில் அடித்துக்கொலை செய்துள்ளனர்.
கொலை செய்த உலக்கையினை சாவகச்சேரி குடம்பியன் இராணுவ முகாமிற்கு அருகாமையில் உள்ள வயல்வெளியில் இரத்தத்துடன் வீசிவிட்டுச் வாகனத்தில் சென்றுள்ளனர்.
குறித்த உலக்கையினை எறியும் போது, அதைக்கண்ட இராணுவ சிப்பாய் இராணுவ அதிகாரிக்குத் தெரிவித்து, குறித்த உலக்கை தடயப்பொருளாக இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் மூவரும் சென்ற வாகனத்தினை இராணுவத்தினர் துரத்திச் சென்ற போது இந்த மூவரையும் பிடிக்க முடியவில்லை என குடமியன் இராணுவ முகாமில் கண்ட இராணுவ சிப்பாய் மன்னறில் சாட்சியமளித்துள்ளார்.
குறித்த தடயப்பொருட்கள் மற்றும் இராணுவ சிப்பாயின் வாக்குமூலத்தினை விசாரணை மேற்கொண்டதுடன், முதலாம், இரண்டாம் சந்தேகநபர்களின் வாக்குமூலங்களின் பிரகாரம் சாட்சியங்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிருபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் என மன்று குற்றவாளிகளின் சட்டத்தரணிகளின் கருத்துக்களை கோரியிருந்தது.
சட்டத்தரணிகளின் கருத்துக்களை மன்று கருத்தில் எடுத்துக்கொண்டு, மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன், மூவருக்கும் தலா 5 வருடங்கள் கடுழிய சிறைத்தண்டனை விதித்ததுடன், தலா 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் அறிவிட்டு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.