யாழ். மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் மக்களுக்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, எதுவித உதவிகளையும் செய்யவில்லை என யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான முஸ்லிம் சம்மேளன தலைவர் கே.எம்.நிலாம் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், மீண்டும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீள்குடியேறியுள்ளனர். அவ்வாறு மீள்குடியேறிய மக்கள் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களினால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், யாழில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் மீண்டும் புத்தளம், கொழும்பு பகுதிகளில் தஞ்சமடையும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இடமில்லை என யாழ். பிரதேச செயலாளர் அறிக்கை விடுத்துள்ள நிலையில், அரசாங்கத்தின் எந்த உதவித் திட்டங்களும் யாழ். முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தினர் விரக்தியடைந்த நிலையில் உள்ளதுடன், தமக்கென்று உதவுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமில்லை’ என்று கூறினார்.
அத்துடன், யாழ். மாவட்டத்திற்கு என இருக்கும் ஒரே ஒரு அமைச்சரும், யாழ். மாவட்ட அபிவிருத்திகுழு தலைவருமாகிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட தமக்கு உதவவில்லை என்றும் முஸ்லிம் மக்களுக்கு குடிசை வீடுகூட அமைத்து தரவில்லை’ என்றும் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி யாழ். பஸ் நிலையத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அதனால், முஸ்லிம் மக்களுக்கு என இருக்கும் யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் ஐவருக்கும் இவ்விடயங்கள் குறித்த மகஜர் ஒன்றினை எதிர்வரும் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை கையளிக்கவுள்ளதாகவும், மகஜரின் பிரகாரம் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 15ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தினை நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.