யாழ் மாவட்ட வறிய மக்களின் மீளெழுச்சிக்காக கடற்றொழில் அமைச்சால் பல்வேறு உதவித் திட்டங்கள்

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதார நலன்கருதி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கயில், யாழ் மாவட்டத்தில் வறுமை நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளை முன்னிறுத்தியே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட 100 க்கும் அதிகமான வறிய குடும்பங்களுக்கு கருவாடு பதனிடும் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. அத்துடன் கடற்றொழில் சார் மக்களின் சுகாதார மேம்பாடுகளை முன்னிறுத்தி 210 குடும்பங்களுக்கு மலசல கூடங்கள் திருத்துவதற்கான நிதி உதவியும் எமது அமைச்சினால் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்றொழில் சார் 30 குடும்பங்களுக்கு வீடுகளை புனரமைப்பதற்கான குறிப்பாக கட்டி முடியாத நிலையில் உள்ள வீடுகளை புனரமைப்பதற்கான நிதி உதவியையும் வழங்கப்படவுள்ளது. இதே நேரம் கடற்றொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் தாம் பிடிக்கும் கடலுணவுகளை பழுதடையாது பாதுகாத்து கரைக்கு கொண்டுவருவதற்காக 75 கடற்றொழிலாளர்களுக்கு ஐஸ் பெட்டிகளும் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டங்களை வழங்குவதற்கான தரவுகள் திரட்டப்பட்டுள்ள நிலையில் சில தினங்களுக்குள் அத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

Related Posts