யாழ்.மாவட்ட செயலக பாதுகாப்பு அதிகாரியின் அடாவடி!!

யாழ்.மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் நிர்வாகமா அல்லது மாவட்ட செயலாளரின் நிர்வாகமா நடைபெற்று வருகின்றது என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

kachcherei-security

யாழ். மாவட்ட செயலகத்திற்கு செல்பவர்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர் மரியாதையற்ற முறையில் நடந்துகொள்கின்றார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடலுக்கு வருகை தந்த அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்களை முன் வாயிலாக செல்ல வேண்டாம் எனவும் மறுபக்க நுழைவாயினால் செல்லுமாறும் மரியாதையற்ற விதமாக விசில் ஊதிச் கூறிகொண்டிருந்தார்.

அப்போது முன்பக்க நுழைவாயில் வழியாக சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராநாதனின் வாகன கண்ணாடியின் மீது அடித்து, இந்த வழியால் செல்ல வேண்டாம் மறுபக்க நுழைவாயினால் செல்லுமாறும் தெரிவித்தார்.

இந்நிலையில், முன்பக்க நுழைவாயினால் செல்வதற்கு வந்த ஊடகவியலாளர்களையும் இந்த பாதையால் செல்ல அனுமதிக்க முடியாது என கிளித்தட்டு மறிப்பது போன்று குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மறித்ததுடன், யார் வந்தாலும் இந்த பாதையால் செல்ல அனுமதிக்க கூடாது என யாழ். மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறினார்.

அந்த வழியால் செல்ல முற்பட்ட பெண் ஊடகவியலாளரை, நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. இந்த வழியால் செல்ல விட முடியாது என கூறி துவிச்சக்கர வண்டியை தள்ளி விட்டார்.

இது குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரிவித்த போது, அவ்வாறு பணித்துள்ளதாகவும், குறித்த பெண் ஊடகவியலாளரின் துவிக்கரவண்டியை தள்ளியதற்காக எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறு நடந்து கொள்ளும் யாழ். மாவட்ட செயலக பாதுகாப்பு உத்தியோகத்தர் இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களை உள்நுழைய அனுமதி அளிக்கின்றார்.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் வருகை தர முன்னர் சுமார் 9.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்குள் இரண்டு புலனாய்வாளர்கள் வருகை தந்து சென்றனர்.

இவ்வாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தவறாக நடந்து கொள்வதையும் மரியாதையற்ற முறையில் நடப்பதற்கு எதிராகவும் அரச அதிபர் ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

ஆகவே இந்த விடயம் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts