இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் வேட்புமனு இறுதிநாளான ஜூலை 15ம் திகதி வரை தாமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர்களின் உறுதியாகியுள்ள வேட்பாளர்களின் விபரம் கசிந்துள்ளது.
7 வேட்பாளர்களுக்காக 10 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். இவர்களில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ,ஈ.சரவணபவன், சுரேஸ் பிரேமச்சந்திரன்(ஈபிஆர் எல் எப்) , க.அருந்தவபாலன், சிறிகாந்தா(ரெலோ), சித்தார்த்தன்(புளொட்) ,சிறீதரன் ஆகியோரின் இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு பெண் வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் அவர் அனந்தியாக இருக்க மாட்டார் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.10 வது நபர் யார் என்பதில் இழுபறி நிலவுகின்றது.
இதனிடையே போனஸ் ஆசனங்களுக்காக தேசியப்பட்டியலில் பரிந்துரை செய்யப்படும் பெயர்களுக்கு மிகுந்த போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு நிலை பேராசிரியரும் பேரவை உறுப்பினரும் தமிழரசுகட்சியின் உபதலைவருமான பேரா.சிற்றம்பலம் அவர்களுக்கு தேசியப்பட்டிலில் இடமளிக்குமாறு மாவை சேனாதிராஜாவை கோரும் கையெழுத்து வேட்டை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது .
பேரா.சிற்றம்பலம் அவர்கள் பல தடவை பாராளுமன்ற தேர்தலி்ல் களமிறங்க எண்ணியபோதும் அவருக்கு இடமளிக்கப்பட்டிருக்கவில்லை.அவருடைய வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்தமையால் அவரை தமிழரசுக்கட்சி களமிறக்கியிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவர் இம்முறை தேசியப்பட்டியலில் உள்வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக பேரவையில் அரசியல் தேவையில்லை என்றும் ஈபிடிபி ஆட்கள் வந்துவிட்டனர் என்று குரல் கொடுத்து விட்டு தமிழரசுக்கட்சியின் இணைத்தலைவரை பேரவையில் கொண்டு வந்து இப்போது அவருக்கு தேசியப்பட்டியல் கோரும் கடிதம் பல்கலைக்கழக சமூகத்தினால் மேற்கொள்ளப்படுவது எந்தவகையில் நியாயம் என விமர்சனம் எழுந்துள்ளது.அவ்வாறு அவர் கோருவதாயின் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து பதவி விலகுவதே நல்லது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சுமந்திரன் சென்ற முறை தேசியப்பட்டியலில் உள்வந்து தற்போது நேரடியாக தேர்தலில் களமிறங்குகின்றார்.சுமந்திரனுக்காக வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் நுாற்றுக்கணக்கானவர்கள் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர் இது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் களமிறங்கும் கஜேந்திர குமாருக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான நேரடிப்போட்டியாக அமைய உள்ளது.
இதேவேளை அனந்தி அவர்கள் கூட்டமைப்பு போட்டியிட சந்தர்ப்பம் தராவிட்டால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடுவதாக தெரிவித்திருக்கின்றமை கூட்டமைப்பில் கோபத்தினை ஏற்படுத்தியிருக்கும் அதே நேரம் மக்கள் முன்னணி ஆதரவாளர்களிடையே சலசலப்பினை ஏற்படுத்தியிருப்தாக தெரிவிக்கப்படுகின்றது ஏனெனில் அனந்தி மக்கள் முன்னணியினை தனது இரண்டாவது தெரிவாக கொண்டிருப்பதாகவும் அதனை தனது பாராளுமன்ற கனவை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்ள நினைப்பதாகவும் அவர்கள் குறைப்படுகின்றனர்.அவருக்கு முன்னணி சந்தர்ப்பம் வழங்கினால் முன்னணியினை பாதிக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.