யாழ் மாவட்ட கிராம அபிவிருத்திக்கென வீடமைப்பு அமைச்சினால் 435 மில்லியன் நிதி ஒதுக்கீடு

யாழ் மாவட்டத்திலுள்ள 435 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 662 திட்டங்கள் அமுல்படுத்துவதற்கென வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் 435 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் 15,000 கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றது. இதனடிப்படையில் இத்திட்டமானது பயனாளிகளின் 25 விகித பங்களிப்புடன் சகல பிரதேசங்களிலும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

இத்திட்டங்கள் பொதுவாக வீதி அபிவிருத்தி முன்பள்ளி அபிவிருத்தி, சனசமூக நிலைய அபிவிருத்தி, வடிகால் புனரமைப்பு, பொதுக் கிணறுகள் புனரமைப்பு, பொது மண்டபங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், கிராமிய செயலகங்கள், பாடசாலை கட்டட புனரமைப்பு, சிறுவர் பூங்காக்கள், மின்சாரம், மீன்பிடி, விவசாயம், விளையாட்டு, கலாசாரம் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி போன்ற வேலைத்திட்டங்களாக இடம்பெறுகின்றன.

இவ்வேலைத்திட்டங்கள் அனைத்தும் பிரதேச செயலகங்கள் மாகாண சபை, பிரதேச சபை, கல்வி அலுவலகங்கள், கமநல அபிவிருத்தி திணைக்களம், சுகாதார திணைக்களம், நகரசபை, மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்களம் போன்ற திணைக்களங்களால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் முடிவடையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts