யாழ் மாவட்டத்தின் கல்வி நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் பல்வேறு நிதி உதவிகளை வழங்க தயாராகவுள்ளது என ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்தார்.
நேற்று (02) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் கெனிச்சி சுகனுமா வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரேவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
வடமாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் தற்போதைய நிலமைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதேவேளை இலங்கை அரசாங்கத்தினது உதவி பெறும் கொள்கையில் ஒருதூணாக உள்ள அவசர உதவி தேவைப்படும் இடங்களை அபிவிருத்தி செய்தல் எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்; யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டு பாடசாலைகளின் கல்வி அபிவிருத்திக்கென ஜப்பானஅரசாங்கத்தினால் 26 மில்லியன் ரூபா நிதியுதவியும் இதன் போது ஜப்பான் தூதுவரால் வழங்கி வைக்கப்பட்டது.
அதன்படி யாழ் முத்துத்தம்பி மத்திய மகாவித்தியாலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்விக்கூடம் அமைப்பதற்கும் வகுப்பறைத் தொகுதியின் அபிவிருத்திக்குமென 11.4 மில்லியனும், அச்சுவேலி புனித திரேசா மகளிர் கல்லுரியில் வகுப்பறை கட்டிடத்தொகுதி அமைப்பதற்கு 11.6 மில்லியன் ரூபாவுமாக 26 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் தூதுவர் கையெழுத்திட்டார்.
வடமாகாண பிரதமசெயலாளர் பத்திநாதன், ஆளுனரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், மற்றும் மேற்படி இரண்டு பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.