யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் விசேட அறிவிப்பு!

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் விசேட அறிவிப்பொன்று இன்று (சனிக்கிழமை) விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “யாழ். மாவட்டத்தில் கோரோனா தொடர்பான பலதரப்பட்ட செய்திகளை சில ஊடகங்கள் தெரிவித்துவருவது மக்கள் மத்தியில் குழப்பத்தினையும் தேவையற்ற பீதிகளையும் ஏற்படுத்துவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் தொற்றினை மாவட்டத்தில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள மத வழிபாட்டுத் தலம் ஒன்றில் பங்குகொண்ட மத போதகருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் இருந்தமையால் அந்த வழிபாட்டு நிகழ்வில் பங்குகொண்ட ஏனையோருக்கும் கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த மத வழிபாட்டில் பங்குகொண்ட இருவர் கோரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் இன்று பிற்பகல் ஒரு மணிவரை குறித்த இருவருக்கும் கோரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அந்த மத வழிபாட்டில் கலந்துகொண்டவர்கள் அவர்களது முற்பாதுகாப்பினையும் மற்றும் சமூகப் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாக அந்தப் பிரதேசத்துக்குரிய சுகாதாரப் பரிசோதகர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது 021 2217278 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இதன் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மாவட்ட இடர்முகாமைத்துவப் பிரிவினரால் உடனுக்குடன் வழங்கப்படும் என்பதுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் பொது நிகழ்வுகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் என்பவற்றை சமூகப் பொறுப்புக் கருதி கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்” என்றுள்ளது.

Related Posts