யாழ். மாவட்டத்தில் வறட்சியால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். தீவகப் பகுதிகளான வேலனை, புங்குடுதீவு, ஊர்காவற்துறை, கரம்பொன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவும் வறட்சியினால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் இப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

ஊர்காவற்துறை பகுதியில் குழாய் நீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும், நாளொன்றுக்கு அரை மணித்தியாலம் அல்லது ஒரு மணித்தியாலத்திற்கே தற்போது நீர் விநியோகிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதான வீதிகளை அண்மித்த பகுதிகளிலுள்ள மக்களுக்கு போதிய நீரை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புள்ள போதிலும், தூரப் பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, புங்குடுதீவு, வேலனை, கரம்பொன் பகுதிகளுக்கான குடிநீர், தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் பௌசர் மூலம் வழங்கப்படுகின்ற போதிலும், அது போதுமானதாக இல்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கரம்பொன் பகுதி மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் குளம், தற்போது நிலவும் வறட்சி காரணமாக வற்றியுள்ளதால், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் இப்பகுதி மக்கள் பெரிதும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை, வவுனியா – ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மக்களும் வறட்சி காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் விவசாய நிலங்களும் நீர் இன்றி கருகிப்போயுள்ளன.

Related Posts