யாழ். மாவட்டத்தில் போதைவஸ்துப் பாவனை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தீவகத்தில் அதன் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தி விழிப்பு குழுக்கள் நியமித்து செயல்பட வேண்டும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
வேலணை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் போதைவஸ்துப் பாவனை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தீவகத்தில் பாவனை அதிகரித்து காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் தாக்கமே புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கான பின்னணி என்பதை நாம் அறிந்துள்ளோம்.
தீவுப்பகுதியில் அதிகளவான துறைமுகங்கள் இருப்பதால் அப்பகுதியில் போதைவஸ்து பொருள் விநியோக நடவடிக்கை அதிகமாக உள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது நிறுத்தப்படவேண்டும். இங்கு யாரையும் குற்றம் சொல்வதற்கல்ல. தனியே ஒருவரால் மட்டும் இதனை கட்டுப்படுத்த முடியாது. எனவே அனைவரும் இணைந்து போதைவஸ்துப் பாவனையை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்த பிரதேச செயலர் தலைமையில் ஒவ்வொரு கிராமங்கள் ரீதியாக விழிப்புக் குழுக் கூட்டங்கள் உருவாக்குவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.