யாழ். மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் கிறீஸ் மற்றும் காரத்தன்மை அதிகரித்துள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக யாழ். மாவட்ட பாவணையாளர் அலுவல்கள் அதிகார அதிகாரி தனசேகரன் வசந்த சேகரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குடிநீர் போத்தல்கள் விற்பனை குறித்து கலந்துரையாடப்பட்டது.
கடந்த மாதம் யாழ். நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, 9 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
அந்த குடிநீர் போத்தல்கள் கொழும்பு அரச பகுப்பாய்வு தினைக்களத்திற்கு பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த பகுப்பாய்வு அறிக்கையில், 8 குடிநீர்ப் போத்தல்களில் கிறிஸ் மற்றும் காரத்தன்மை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளமையால், குறித்த குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அறிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், குடிநீர்ப் போத்தல்களில் கழிவுகள் மற்றும் கிறிஸ் மற்றும் எண்ணெய் உட்பட காரத்தன்மைகள் அதிகாரமாக காணப்படுகின்றதனால் மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், கலப்படங்கள் மற்றும் கழிவு எண்ணெய் தன்மைகள் காணப்பட்டால் உடனடியாக முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.