யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்புமனுத் தாக்கலும் பத்திரிகையாளர் சந்திப்பும்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கலை திருவிழாவாக கொண்டாடிய சம்பவம் ஒன்று நேற்று யாழ்ப்பாணம் கச்சேரியில் இடம்பெற்றது.

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மதியம் 12.30 மணியவில் வேட்பு மனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தது.

முன்பதாக யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள வைரவர் கோவிலில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், பிரமுகர்கள் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர், பழைய பூங்கா முன்றலைச் சென்றடைந்தனர்.

அங்கிருந்து மங்கள வாத்தியம் சகிதம் மாவட்ட செயலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். வேட்பு மனு ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டது.

election -1


குட்டி ஜப்பானாக வடக்கு மாறும்: டக்ளஸ்

வடமாகாண சபை தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றால் வடக்கை குட்டி ஜப்பானாக மாற்றுவோம். அதுவே எமது நோக்கமாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தலின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் யாழ். கிறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தினர் அந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

election -2

வடபகுதி மக்களின் வாழ்க்கையை இன்னும் பல மடங்கு உயர்த்துவதுடன், ஒரு சுதந்திரமான செயற்பாட்டினை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

யாழ். மாவட்டத்தில் வாழ்கின்ற மக்கள் இன்று சுதந்திரமாக செயற்படுகின்றனர். அந்த சுதந்திரத்திற்கு இன்னும் பல மடங்கு அர்த்தம் கற்பிக்கவேண்டுமாயின் இந்த தேர்தலில் அரசாங்கம் வெற்றியீட்டவேண்டும். அதேநேரத்தில் அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினை ஒன்று இருக்கின்றது. அது தொடர்பாக அமைச்சரவையில் பல தடவைகள் கலந்துரையாடி இருக்கின்றோம், எமது அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக, ஏற்கெனவே கூறப்பட்டு வந்த 13 ஆவது திருத்த சட்டத்தினை ஆரம்பமாக கொண்டும் அதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், அதை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் எமது நடவடிக்கைகள் அமைந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் சிபாரிசுக்கு இந்த விடயங்கள் விடப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சிகள் பங்கு பற்றவில்லை. எதிர்க்கட்சிகள் பங்குபற்றாத காரணத்தினாலும்;, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் கட்சிகளுக்கு இந்த பிரச்சினைகளை தீர்க்க விரும்பம் இல்லாத காரணத்தினாலும், அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் கலந்து கொள்வார்களாயிருந்தால், விரைவாக இந்த பிரச்சினைகளை தீர்க்கலாம் என்று நம்புகின்றேன் என்றார்.

எப்படி இருந்தாலும், எதிர்க்கட்சியினர் வந்தாலும் வராவிட்டாலும், எங்களின் பிரச்சினைக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாக தீர்வினை காண்போம். அது எமது மக்களுக்கு கூடிய நம்பிக்கையையும், உற்சாகத்தினையும் கொடுக்குமென்று நம்புகின்றேன். பிரச்சினைகளை தீர்க்க விரும்பாதவர்கள் எழுப்புகின்ற பிரச்சினைகளை, மக்கள் பொருட்படுத்த கூடாதென்றும் அவர் இதன்போது பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், காணி விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கதைத்திருக்கின்றேன். அமைச்சரவை மற்றும் படைத்தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளேன். அதன் விவகாரத்தை மீள் பரிசீலனை செய்வதாக சொல்லியிருக்கின்றார்கள் அந்தவகையில், எங்கள் மக்களின் காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க முடியும் என்பதுடன் காணி விடுவிப்பதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றோம் என்றும் கூறினார்.

தான் ஏன் போட்டியிடவில்லை: டக்ளஸ் விளக்கம்

ஜனாதிபதி என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காகவும் நான் வெளியில் நின்று முழுமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதியுடன் கதைத்து யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை தீர்மானித்துக்கொள்வோம்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் போராளிகள் 50 பேர் விண்ணப்பித்திருந்தனர்: சுசில்

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட முன்னாள் போராளிகள் பலர் விண்ணப்பித்திருந்த போதும் நேர்முகத் தேர்வுக்கு சமூகம் தராததால் அவர்கள் வேட்பாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவில்லை’ என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந் தெரிவித்தார்.

‘இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு 50 முன்னாள் போராளிகள் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு விண்ணப்பத்திருந்தவர்கள் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளாத காரணத்தால் அவர்கள் வேட்பாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவில்லை’ என்றார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தேர்தல் சுவரொட்டிகளில் பாதுகாப்பு செயலாளரின் புகைப்படத்தினைப் பயன்படுத்தியமையே வேட்பாளர் தெரிவின் இழுபறி நிலைக்கு காரணமாக அமைந்ததாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இனிவரும் காலங்களில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியின் புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் தற்போது பாதுகாப்பு செயலாளரின் புகைப்படத்துடன் உள்ள தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுமாறும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Related Posts