யாழ். மாவட்டத்தில் உணவிலிருந்து ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 25 வீதம் தொடக்கம் 30 வீதம் வரையில் 2014ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கம் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தது.
உலக சுகாதார தினம் 7ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே, சங்க மருத்துவர்கள் மேற்கண்டவாறு கூறினர். அவர்கள் தொடர்ந்து கூறுகையில்,
ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார தினம் ஒவ்வொரு தொனிப்பொருளில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம் உணவுப் பாதுகாப்பு என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளது. உலகளாவிய ரீதியில் 2 மில்லியன் மக்கள் பாதுகாப்பற்ற உணவை உட்கொள்வதன் மூலம் இறக்கின்றனர். இந்த பாதுகாப்பற்ற உணவால் பற்றீரியா, வைரஸ், ஒட்டுண்ணி என்பவற்றோடு இரசாயனப் காரணிகளும் உடலில் நுழைகின்றன.
வயிற்றோட்டம் போன்ற நோய்கள் முதல் புற்றுநோய் வரை ஏற்படுகின்றது. பழங்களை தூய நீரிலே கழுவிய பின்பு உண்ணுதல், கீரை வகை உணவுகளை உப்பு நீரிலே கழுவுதல் என்பன முக்கியமானவை.
ஹோட்டல்களில் உணவு பரிமாறுபவர்கள் சுத்தமாக செயற்படுவதில்லை. மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். புள்ளி விபர ரீதியில் பார்க்கின்ற போது, ஏனைய மாவட்டங்களை விட எமது மாவட்டத்தில் பாதுகாப்பற்ற உணவு மூலம் ஏற்படும் நோய்கள் அதிகளவில் உள்ளது. அதற்கு நாம் நிலத்தின் கீழ் தண்ணீரை நம்பி வாழ்வதும் ஒரு காரணம் ஆகும்.
குளிரூட்டிகளில் உணவுகளை வைக்கும் போது, எந்த உணவை எத்தனை நாட்களுக்கு எந்த பகுதியில் வைப்பது என்பது தொடர்பில் கவனமாக செயற்படவேண்டும். குளிரூட்டியில் வைத்த பின் உணவு பழுதடையாது என கூறமுடியாது. அதற்கான கால எல்லை உள்ளது.
உணவுகளை பிளாஸ்ரிக் பாத்திரங்களில் வைத்து உண்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. இயற்கை பசளைகளை பாவித்து பெறப்படும் உணவுப் பொருட்கள் மிகவும் சிறந்தது. செய்கை பசளைகள் மூலம் புற்றுநோய் ஏற்படுகின்றது என்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பி.பசுபதிராஜா, மருத்துவ சங்க தலைவர் முரளி வல்லிபுரநாதன், மருத்துவ சங்கச் செயலாளர் சுரேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.