யாழ். மாவட்டத்தில் இதுவரை 33,472 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

யாழ். மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது வரையான காலப்பகுதியில் 33,472 குடும்பங்கள் மீள்குடியேற்றியுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘இந்தியாவில் இருந்து வருகை தந்த 955 குடும்பங்கள் உள்ளடங்கலாக 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் இவ்வாறு 33,472 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளன. இந்நிலையில், யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 10,770 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியவையாக உள்ளன.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த 2015ஆம், 2016ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்த உயர்பாதுகாப்பு வலயங்கள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டன.

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்த வளலாய் கிராமம் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது எஞ்சியுள்ள பகுதிகள் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலேயே அடங்குகின்றன.

அதன் அடிப்படையில், கடந்த வருடம் முதல்கட்டமாக 1,058 ஏக்கர் நிலப்பரப்பும் இரண்டாம் கட்டமாக இவ்வருட முற்பகுதியில் 701 ஏக்கர் நிலப்பரப்பும் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டன.

இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள 1,759 ஏக்கர் நிலப்பரப்பில் மீள்குடியேறவென இதுவரை 2,125 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன. அதற்குரிய வேலைத்திட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது’ என அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மேலும், யாழ். மாவட்டத்திலுள்ள ஏழு பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள 31 நலன்புரி முகாம்களில் 971 குடும்பங்களை சேர்ந்த 3,405 பேர் இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.

அத்துடன், 9,205 குடும்பங்களுக்கு சொந்தமான வீடுகள் அடங்கலான 6,551 ஏக்கர் நிலப்பரப்பு காணி யாழ். மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோரது கட்டுப்பாட்டில் உள்ளன.
அந்தவகையில், 10,770 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றம் செய்யவேண்டியவர்களாக யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts