யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள போதைப்பாவனை, வாள்வெட்டுக் கலாசாரம் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
குடாநாட்டு நிலைமைகளை ஆராயும் விசேட கூட்டம் யாழ். அரச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அரச அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், பிரதேச சபைத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள போதைப் பாவனை, வாள்வெட்டு, அடிதடிக் கலாசாரம், மிருகபலியிடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அத்துடன் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல்களை வெளியிடுவோரை வெளிப்படுத்துவதால் அவ்வாறானவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்றும், பொலிஸார் இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்தது. அத்துடன் இங்கு இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்து பொலிஸ் நிலையங்களில் தகவல் கொடுக்க அஞ்சுபவர்கள், பொலிஸாரால் தீங்கு இழைக்கப்படுவதாக்க கருதுபவர்கள் அதுபோன்ற சம்பவங்களை தன்னுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கமுடியும் என்று வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இதற்கென அவர் தனது தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு (0718591005) ஆங்கிலம் அல்லது சிங்கள மொழியில் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.