யாழ் மாவட்டத்திலே போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் 11, சுயேட்சைக் குழுக்கள் 09 தகுதி

Suntharam arumai_CIவடமாகாண சபைத்தேரதலிற்கான அறிவிப்பு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த 25 ஆம் திகதியில் இருந்து வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் பணிகள் இடம்பெற்று வந்தன, இப் பணிகள் நேற்று (01.08.2013) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தன.

இது தொடர்பாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் திரு சுந்தரம் அருமைநாயகம் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற வடமாகாண சபை தேர்தலிற்கான யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்திற்கான வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு இன்று (நேற்று) நண்பகல் 12 மணியுடன் அதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் யாழ் தேர்தல் தொகுதிக்கான 23 கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. 13 அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினதும் 10 சுயேட்சைக் குழுக்களினுடையதுமாக மொத்தமாக 23 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு அமைவாக மாகாண சபை தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் 03 நியமனப்பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன. 02 அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நியமனப்பத்திரம் மற்றும் ஒரு சுயேட்சைக் குழுவினுடைய நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டன.

அந்த அடிப்படையிலே யாழ் மாவட்டத்திலே போட்டியிடுவதற்காக நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்த ஏனைய 20 நியமனப்பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 11, மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 09 வடமாகாண சபைத் தேர்தலிலே யாழ் மாவட்டத்திலே போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.

நிராகரிக்கப்பட்ட கட்சிகளின் அடிப்படையிலே ஜாதிக சங்வர்த்தன பெரமுன, எமது தேசிய முன்னணி என்பனவும் முருகன் குமாரவேல் தலைமையிலான சுயேட்சைக் குழுவும் நிராகரிக்கப்பட்டன.

மேலும் யாழ் மாவட்டத்திலே நடக்கின்ற முதலாவது மாகாண சபை தேர்தல் என்ற அடிப்படையிலே உண்மையில் இது சர்வதேசத்தினுடைய அனைத்துக் கண்காணிப்பும் இத் தேர்தலிலே உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

இதிலே அனைவரும் அதாவது இந்த கட்சிகளிலே போட்டியிடுகின்ற அனைவரும் பூரணமான ஒத்துழைப்பினை தரவேண்டும். சமாதானமான, நீதியான, நேர்மையான தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்துக் கட்சிகள் சுயேட்சைக் குழுக்களிடம் விடுத்துள்ளோம்.அதனடிப்படையில் இந்த தேர்தல் நடவடிக்கை வெற்றிகரமான முறையிலே நடாத்தக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களிற்கு இருக்கின்றது ‘ என்று தெரிவித்தார்.

யாழ் நிர்வாக மாவட்டததிலே மாகாண சபை தேர்தலிலே போட்டியிடுகின்ற கட்சிகளினுடைய விபரம் வருமாறு,

கட்சிகள்

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
  2. சிறீ லங்கா தொழிலாளர் கட்சி
  3. ஜனசிட்ட பெரமுன
  4. சோசலிச சமத்துவக் கட்சி
  5. ஜக்கிய தேசியக் கட்சி
  6. மக்கள் விடுதலை முன்னணி
  7. ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
  8. ஜனநாயக கட்சி
  9. ஜனநாயக ஜக்கிய முன்னணி
  10. ஜக்கிய சோசலிசக் கட்சி
  11. சிறீ லங்கா மகாஜன பக்சய

சுயேட்சைக் குழுக்கள்

  1. அன்ரனி ரங்க துரை தலைமையிலான குழு
  2. ராஜ சிங்கம் மிதுன் ராஜ்
  3. நல்லைநாதன் திரிலோகநாதன்
  4. பொன் மதிமுக ராஜா விஜயகாந்
  5. ஜமுன் முகமட் விஜய்
  6. இராஜ ரட்ணம் தாமோதர ராஜா
  7. மாணிக்க சோதி அபிமன்ன சிங்கம்
  8. செலிவி தம்பிப்பிள்ளை இருதயராணி
  9. கிருஸ்ணசாமி சுபாஸ்கரன்.

Related Posts