யாழ்ப்பாணம் மாநகர சபை வேட்பாளராக, இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளார்.
இதனையடுத்து தான் வகித்து வந்த மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடித்தை, கடந்த 14ஆம் திகதி வடக்கு மாகாண அவைத்தலைவரிடம் கையளித்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணத்தின் ஒரேயொரு மாநகர சபையாக உள்ள யாழ். மாநகர சபை மேயர் பதவியை அடைவதற்கு பலத்த போட்டி காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள்ளேயே இப்பதவிக்கு பலர் போட்டியாக காணப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆர்னோல்ட் இப்பதவிக்கு போட்டியிடவுள்ளதாக தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்டிடம் கேட்டபோது, “கட்சியின் உயர்மட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம் மாநகர மேயராக போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த 14ஆம் திகதி வடக்கு மாகாண அவைத்தலைவரிடம் இராஜினாமா கடிதத்தினை வழங்கியுள்ளதோடு, கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் உத்தியோகபூர்வ அறிவித்தலுக்காக காத்திருக்கின்றேன்” என்றார்.