யாழ்.மாநகர சபை முதல்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட்டை யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் யாழ். பொலிஸாரால் இரண்டு தடவைகளுக்கு மேல் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் முதல்வர் இமானுவேல் ஆனல்ட் விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறியிருந்த நிலையில் இந்த அழைப்பாணையை நீதிமன்றம் ஊடாக பொலிஸார் அனுப்பிவைத்தனர்.

யாழ்ப்பாண மாநகர சபைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் நடப்பட்டன என்று தெரிவித்து யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரால் அவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டன.

இது தொடர்பில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்களை நட்டுவைத்த தென்னிலங்கை நிறுவனம் யாழ்ப்பாண மாநகர முதல்வருக்கு எதிராக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியது.

அந்த முறைப்பாட்டுக்கு அமைவாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் வேலைப் பழுவைக் காரணம்காட்டி அவர் பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்கவில்லை. அதனால் முதல்வர் இமானுவேல் ஆனல்ட்டிடம் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்று முன்தினம் (புதன்கிழமை) முதல்வர் அலுவலகத்தில் பொலிஸார் வருகை தந்திருந்தனர்.

எனினும் வாக்குமூலம் வழங்க மாநகர முதல்வர் மறுப்புத் தெரிவித்திருந்தார். அதனால் இன்று 18ஆம் திகதி மாநகர முதல்வர் அலுவலகத்தில் வைத்து அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்வதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகிய இருவருக்கும் எதிராக சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

“கேபிள் இணைப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் ஒன்றால் நல்லூர் தொடக்கம் கல்வியங்காடு வரையான பகுதியில் 30 கம்பங்கள் நடப்பட்டன. அவற்றை நடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது.

எனினும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும் ஆணையாளரும் இணைந்து அந்த 30 கம்பங்களையும் அகற்றியுள்ளனர். அதனால் அந்தக் கம்பங்களை நட்ட நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட நிறுவனம் சார்பில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஆணையாளரால் வாக்குமூலம் பெறப்பட்ட போதும் மாநகர முதல்வர் வாக்குமூலம் வழங்குவதற்கு சமூகமளிக்கவில்லை.

அவர் தனது வாக்குமூலத்தை பிறிதொரு நாளில் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். அதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களான யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரை நீதிமன்றுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்” என்று பொலிஸாரால் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளர் இருவரும் வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாக அழைப்பாணையை அனுப்புமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த தினம் வரை வழக்கு ஒத்திவைப்பதாக நீதவான் தெரிவித்தார்.

Related Posts