யாழ்.மாநகர சபை பட்ஜெட் மீண்டும் தோல்வி; முதல்வர் பதவியை இழந்தார் ஆனல்ட்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் எதிர்ப்பால் இரண்டாவது தடவை தோற்கடிக்கப்பட்டது.

அதனால் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் பதவியிழந்தார்.

2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் கடந்த ஆண்டு இரண்டு முறை தோற்கடிக்கப்பட்ட நிலையில் முதல்வர் தனக்கு உள்ள அதிகாரத்தால் அதனை நிறைவேற்றியிருந்தார். எனினும் இந்த ஆண்டு 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் உள்ளூராட்சி சபை சட்ட ஏற்பாடுகள் ஊடாக நிறைவேற்ற முடியாது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சிறப்பு அமர்வு இன்றைய தினம் காலை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் நடைபெற்றது.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபையில் இரண்டாவது முறையாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினார்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தார். அதனால் குறித்த வரவு செலவு திட்டத்திற்கு 21 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 10 பேர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த 13 பேர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என 24 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

அதனால் யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டம் தேற்கடிக்கப்பட்டதன் காரனமாக இன்றைய நாளிலிருந்து 14 நாட்களுக்குள் யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த 2 ஆம் திகதி முதன் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போது 5 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts