யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.45 மணியளவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று இரவு 8 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அழைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் 6 மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதனை தொடர்ந்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள விஸ்வலிங்கம் மணிவண்ணன், வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும் வெற்றிலை துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவிப்பு விடுத்தார்.
அத்தோடு, இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கப்பட்டு, காவல் படையினர், தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.
மேலும் காவல் படையின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் குறித்த காவல் படையின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல் துறை சீருடைகளை ஒத்த சீருடை என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, யாழ்.மாநகர சபை ஆணையாளரிடம் இவ்விடயம் தொடர்பாக தொடர் விசாரணை முன்னெடுக்கப்பட்டு, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்த குற்றச்சாட்டிலேயே விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.