கடந்த வருடம் கிடைத்த 12 மில்லியன் ரூபா பணத்தை, செலவிடாமல், பத்திரமாக பாதுகாத்து திருப்பி அனுப்பியுள்ளது யாழ்ப்பாணம் மாநகரசபை.
யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முத்திரைவரிப்பணம் கிடைக்காத காரணத்தால், அதற்கு பதிலாக மாகாண ஒதுக்கீட்டின ஊடாக 65 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. இந்த பணத்தில் 27 வட்டாரங்களிற்கும் 1.5 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டு, அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேசமயம், இந்த நிதியில் இருந்து மாநகர சபைக்காக 11 மில்லியன் ரூபாவில் ஓர் டோசர் கொள்வனவு செய்யப்பட்டது.
எஞ்சிய, 14 மில்லியன் ரூபாவில் இரு சந்தைகள் மற்றும் ஓர் ஆயுள்வேத வைத்தியசாலை என்பவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டது.
அவ்வாறு மேற்கொண்ட திட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் நடைமுறைகள் காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. இவற்றின் அடிப்படையில் உள்ளூராட்சி ஆணையாளரால் இந்தப் பணிகளை முடிக்க, டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
நடைமுறைக்கிணங்க, ஜனவரி மாதம் 3 ஆம் திகதி சகல பணிகளும் இடைநிறுத்தப்பட்டு, முழுமை செய்யப்பட்ட பணிகள் மட்டும் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, வருடாந்த கணக்குகள் முடிக்கப்பட்டன.
இதில், மாநகரசபை செலவிடாமல் வைத்தியருந்த 12 மில்லியன் ரூபாவுக்காக பணிகள் செயற்படுத்தப்படாத காரணத்தினால், அந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
மாநகரசபையின் அசமந்தமே இந்த நிதி திரும்பிச் செல்ல காரணமென அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக, வடமாகாணசபை முதலமைச்சர் வினைத்திறனற்றவர், நிதியை திருப்பி அனுப்புகிறார் என, மாகாணசபையில் அங்கம் வகித்த காலத்தில், தற்போதைய யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் பல தடவைகள் குற்றம்சுமத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கடந்த வருட இறுதிப்பகுதியில் முதல்வர் சில நீண்ட வெளிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.