யாழ் மற்றும் வன்னியில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவத்தினர் அவசியம்!- கோத்தபாய

Koththapaya-rajaவடக்கில் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் பிரசன்னம் அவசியமானது என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வன்னியிலும் கூடப் படைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம். ஆயுதப்படைகளின் நிலை கொள்ளலானது, ஓர் அரசியல் விவகாரமாகவோ, எந்தவொரு வெளிநாட்டு சக்திகளின் கலந்துரையாடலுக்கான விவகாரமாகவோ இருக்கக்கூடாது.

போருக்குப் பின்னர் வடக்கில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் இராணுவத் தலையீடுகளால் முழுமையான குடியியல் ஆட்சியை ஏற்படுத்துவதில் தடங்கல்கள் உள்ளதாக, குற்றச் சாட்டுகளைக் கூறுவோர், 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் படிப்படியாக இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

எத்தகைய நிலையை எதிர்கொள்வதற்கும் ஏற்ற தயார் நிலையில் ஆயுதப்படையினர் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மீண்டும் தீவிரவாத எழுச்சி ஏற்படுவதைத் தடுப்பதற்கான பலமான அரணாக ஆயுதப்படைகளின் நிலைகொள்ளல் அமைந்திருக்கும்.

தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தாம் தயாரில்லை. இராணுவத்தினரின் பிரசன்னம் ஒரு அற்பமான விடயம், ஆனால் அது தவிர்க்க முடியாதது. இருந்தபோதிலும் பல்வேறு தரப்புகளும், ஒரு பகுதி ஊடகங்களும், பாதுகாப்பு விவகாரங்களுடன் அரசியல் விளையாட்டு நடத்துகின்றன.

முன்னைய அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் விட்ட தவறுகளால் நாடு மிகக் கடுமையான விலைகளைக் கொடுத்துள்ளது. அதே தவறை மீண்டும் செய்வதற்கு நான் தயாராக இல்லை என தெரிவித்தார்.

Related Posts