யாழ்.மறைமாவட்டத்தில் அனைத்து ஆலய செயற்பாடுகளுக்கும் உடன் தடை

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் மறுஅறிவித்தல் வரை அனைத்து ஆலய செயற்பாடுகளும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்யப்படுகிறது என யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில், “22ஆம் திகதி ஞாயிறு தினத்தை உபவாச செப தினமாக அனுசரிக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் வேண்டுகோளை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் குருக்கள் துறவியர் மற்றும் இறைமக்கள் அனைவரும் கட்டாயமாக அனுசரிக்கவும்.

அனைவரும் வீட்டிலிருந்தவாறு தனியாகவோ குடும்பமாகவோ திருச்செபமாலை, திருமணித்தியாலம், இறை இரக்கச் செபம், திருச் சிலுவைப்பாதை, வியாகுலபிரசங்கம் போன்ற பக்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளவும்.

கண்டியில் அன்று கொள்ளை நோய் வந்தபோது பேராபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றிய இலங்கையின் அப்போஸ்தலர் புனித யோசவ்வாஸ் அடிகளார் மற்றும் மனுக்குலத்தின் தாயாக விளங்கும் தேவதாயரிடம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இலங்கை நாடு பாதுகாக்கப்பட உருக்கமாக மன்றாடுங்கள்.

மக்களை ஒன்று கூட்டும் எந்த ஒரு நிகழ்வையும் ஒழுங்கு செய்ய வேண்டாமென பங்குத்தந்தையர்கள் கேட்கப்பட்டுள்ளார்கள்.

இறுதிச் சடங்கு, திருமுழுக்கு போன்ற தேவைகளுக்கு பங்குத்தந்தையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரிய ஒழுங்குகளை செய்யவும். இப் பயங்கரமான தொற்றுநோய் மேலும் பரவாமல் உலக மக்கள் அனைவரையும் இறைவன் பாதுகாக்க இறையாசீர் வேண்டுகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts