யாழ். மக்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு!!

யாழ்ப்பாணத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வடக்கு – தெற்கு என்ற பாகுபாடு இன்றி அரசாங்கம் முன்னெடுக்கும் குளோபல் ஃபேர்-2023 எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (10.07.2023) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தெற்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள். நாங்கள் தென்பகுதி அரசியல்வாதிகள் என்று சிலர் நினைக்கின்றார்கள். ஆனால் எமக்கு வடக்கு, தெற்கு என்ற வேறுபாடு இல்லை. நாங்கள் முழு நாட்டையும் ஒரே நாடாகவே கருத்திற்கொண்டு செயல்படுகின்றோம்.

வடக்கிற்கு நடக்கும் அநீதிகள் பற்றி பேசும் போது, தெற்கில் ஒரு முன்னோடித் திட்டத்தை முன்னெடுத்து அதன் முதல் வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கின்றோம்.

இதன் மூலம் ஆள் கடத்தலை தடுக்கவும், பல்வேறு கடத்தல்களில் சிக்குபவர்களை தடுக்கவும், தொழில் வாய்ப்புகளுக்கு பயிற்சி பெற்றாதவர்களுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லவும், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு தேவையான விழிப்புணர்வு வசதிகளை ஏற்படுத்தவும் நாம் செயல்பட்டு வருகிறோம்.

கொழும்புக்கு வந்து எமது அமைச்சின் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சேவைகளையும் நாம், நீங்கள் கொழும்புக்கு வராமல் யாழ்ப்பாணத்திலேயே பெற்றுக் கொள்ளுவதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகின்றோம்.

பயிற்சி, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான பிரச்சினைகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பான விடயங்கள், வெளிநாட்டலுவல்கள் அமைச்சகத்தின் தூதரகத் துறையின் சேவைகள் முதலானவற்றை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதிகள் குளோபல் ஃபேர்-2023 யில் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தொழில் திணைக்கம் ஆகியவற்றின் சேவைகளை உங்களின் காலடிக்கு கொண்டு வருதுடன் பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கான உதவி மற்றும் சமூக சேவை வாய்ப்புக்கான சந்தர்ப்பத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் எம்முடன் இதற்காக இணைந்துள்ளன. முதலாளிகளின் அறக்கட்டளை நிதியச் சபை தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அதிகார சபை சமூக சேவைகள் திணைக்களம் போன்றவற்றின் அனைத்து நிறுவனங்களின் வேவைகளும் இங்கு இடம்பெறவுள்ளன.

பல நாட்களாக வரிசையில் காத்திருந்து பெறும், அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் சென்று யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசுபவர்களுக்கு அந்த மொழியிலேயே தேவையான சேவைகள் அனைத்தும் வழங்கப்படும். உள்நாடு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பமும் கிடைக்கும்.

பயிற்சி பெற்றும் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தொழில் பயிற்சி அதிகார சபை மூலம் சான்றிதழ் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்த வரை, அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பில் தேவையான சேவைகள் வழங்கப்படும்.

தொழில் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொழிலாளர் தொடர்பான விடயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி இங்கு இடம்பெறும். சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் பொழுது போக்கு இசைக் கச்சேரிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் கலந்துகொள்ளவிரும்புவோர் இணையவழி மூலம் பதிவுகளை மேற்கொள்வதற்கான பணியும் நடந்து வருகிறது. உங்கள் பதிவுகளை மேற்கொள்ள உங்கள் QR குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

இது ஒரே நாடு. ஒரு தேசம். ஒரே நாட்டில் உள்ள அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துகிறோம் குளோபல் ஃபேர்-2023 மூலம் சீரான சேவைகளை வழங்கும் செய்தியையும் முன்னெடுத்து வருகிறோம்.

மனித உரிமைகள் பேரவை அமர்வு இடம்பெறும் போது தான் பலர் நல்லிணக்கம் பற்றி பேசுகின்றனர். ஆனால், ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எப்போதும் நல்லிணக்கக் கடமையில் இருக்க வேண்டிய பண்புகளை மேற்கொண்டுவருகின்றோம் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts