யாழ்ப்பாண மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்கும் நோக்கில், ‘சொலிடாரிடி சென்ரர்’ எனும் சட்ட உதவி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ். நல்லூர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள இவ் அலுவலகத்தை, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சொலிடாரிடி நிறுவனத்தின் வதிவிட பணிப்பாளர் அலோன்சோ சசோன் ஆகியோர் இணைந்து நேற்று (திங்கட்கிழமை) சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தனர்.
இந்த அலுவலகத்தின் ஊடாக தொழிலாளர் உரிமை மற்றும் பால் நிலை சமத்துவம் பேணுதல் தொடர்பான சட்ட உதவிகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. சட்ட உதவிகள் தேவைப்படுவோர், 021 – 2214444 எனும் இலக்கத்திற்கு தொடர்புகொள்ளலாம்.
இந்த நிலையம் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இத் திறப்புவிழா நிகழ்வில், ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ், உடுவில் பிரதேச செயலாளர், கோப்பாய் பிரதேச செயலாளர் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.