டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிச் சுற்றுப்புறத்தை துய்மைப்படுத்துவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையினால் உருவாக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை மாநகரசபையானது இரவோடு இரவாக திருடி சென்றுள்ளது. அத்துடன் வைத்தியசாலையை சூழவுள்ள வீதிகளிலும் கழிவு நீர் வாய்க்கால்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை மாநகரசபையானது அகற்றுவதில்லை எனவும் இது தொடர்பாக தாம் வடமாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கமானது அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் அவ் டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வைத்தியசாலையில் டெங்கு நோயாளிகள் உள்ளபோது வைத்தியசாலை உட்புற சூழலிலும், வைத்தியசாலையின் வெளிப்புற சூழலிலும் டெங்கு நுளம்பு உருவாகக்கூடிய சந்தர்ப்பங்களை இல்லாது செய்தல் வேண்டும்.
இதன் காரணமாக வைத்தியசாலையின் உட் புறப் பகுதிகளில் டெங்கு நுளம்பு உருவாகுவதை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் வைத்தியசாலையின் வெளிப்புறத்தில் குறிப்பாக வைத்தியசாலையினை சுற்றியுள்ள வீதிகளிலும் கழிவு நீர் வாய்க்கால்களிலும் மோசமாக டெங்கு நுளம்பு பரவுதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான இவ் வீதிகளில் உள்ள வியாபார நிலையங்களிலிருந்து வீசப்படும் பொலித்தீன் கழிவுகள் வீதிகளில் தேங்கிக்கிடப்பதுடன் கழிவு நீர் வாய்கால்களிலும் அடைத்துள்ளன. இவற்றை மாநகரசபையானது அகற்ற வேண்டும். ஆனால் மாநகரசபையானது அவ்வாறு செய்வதில்லை.
இவ்வாறன நிலையில் நோயாளிகளின் நன்மைகருதி யாழ்.போதனா வைத்தியசாலையின் செலவில் வைத்தியசாலையை சுற்றியுள்ள வீதிகளும் கழிவு நீர் வாய்க்கால்களும் துப்புரவு செய்யப்பட்டிருந்தன. இதற்காக உபகரணங்கள் வேலையாட்கள் அனைத்தும் வைத்தியசாலையின் செலவில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவற்றைவிட கழிவு நீர் வாய்க்கால்களில் இருந்து அகற்றப்பட்ட குப்பைகளை உடனடியாக அகற்ற முடியாத காரணத்தால் அவற்றின் நீரானது வடிந்தோடும் வகையிலும், ஏனைய குப்பைகளை முறையற்ற வகையில் வீசப்படுவதை தவிர்க்கும் வகையிலும் இரண்டு தகர குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்விரண்டு குப்பை தொட்டிகளும் கனமான தகர உலகத்தால் வடிவமைக்கப்பட்டு வீதியின் ஒரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இவ்வாறு எம்மால் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை மாநகரசபையானது எமக்கு எதுவித அறிவுறுத்தல்களும் வழங்காது இரவோடு இரவாக திருடி சென்றுள்ளது. மாநகரசபையானது மேற்கொள்ள வேண்டிய துப்புரவு பணிகளை அவர்கள் மேற்கொள்ளாததுடன் நாம் டெங்கு நோயின் தாக்கத்தை குறைக்கும் வகையிலும் அதனை பரப்பும் நுளம்பின் உருவாக்கத்தை இல்லாமல் செய்யும் வகையிலும் எம்மால் உருவாக்கப்பட்ட குப்பை தொட்டிகளையும் அவர்கள் திருடிச் சென்றுள்ள மாநகரசபையின் இச் செயற்பாடானது டெங்கு நோயின் தாக்கத்தை அதிகரிப்பதற்கான செயற்பாடகவே உள்ளது.
மாநகரசபையின் இச் செயற்பாடு தொடர்பாகவும் வைத்தியசாலையின் வெளிப்புற வீதிகளிலும் கழிவு நீர் வாய்க்கால்களிலும் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை மாநகரசபை அகற்றாது டெங்கு நுளம்பு உருவாகுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இச் செயற்பாடு தொடர்பாக வடமாகண ஆளுநருக்கு தாம் முறைப்பாடொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.