யாழ்.போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவிலிருந்து சட்ட விரோதமாக திருடிச் செல்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மருந்துக் குளிகைகள் தொகுதிகள் பாதுகாப்பு ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளன.
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் மருந்தகத்திற்கு முன்பாக பையொன்றினுள் சுமார் 200 இற்கு மேற்பட்ட மருந்துக் குளிகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இம் மருத்துக் குளிகைகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்குரிய பற்றுச் சீட்டுடன் வெளியில் கொண்டு செல்லத் தயாராக இருந்த நிலையில் வைத்தியசாலை ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்திசாலை பதில் பணிப்பாளர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பூர்வாங்க விசாரணையை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நோயாளருக்கு இவ்வளவு தொகையான மருந்துகள் வழங்கப்படுவதில்லை எனவும் இம் மருந்துகள் காலாவதியானவகையாகக் காணப்படவில்லை எனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இது திருட்டுத்தனமாக வெளியில் கொண்டு செல்வதற்கு வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த மாதம் இதே பகுதியில் பழைய சத்திர சிகிச்சை உபகரணங்கள் வைத்தியசாலைக்கு வெளியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தொடர்புடைய இருவர் விடுமுறையில் நிற்பதால் விசாரணைகள் தாமதப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை உபகரணங்கள் வெளியே வீசப்பட்டிருந்தது