எதிர்வரும் 16-ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் மற்றும் உணவு பொதி செய்வதற்கான லன்ஞ் சீற் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நோயாளர்களை பார்வையிட வரும் பொது மக்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வைத்தியசாலை வளாகத்தினுள் பொலித்தீன் கொண்டு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை (துணியால் செய்த) பாவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
உணவு கொண்டு வருவதற்கு லன்ச் சீற் இற்குப் பதிலாக சாப்பாட்டு பெட்டிகளை (துருப்பிடிக்காத உலோக/உணவுத் தர பிளாஸ்ரிக்) வாழை இலை, வாழைமடல் போன்ற இயற்கையான சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இயற்கையான பொருள்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதை முடியுமான வரை தவிக்கவும். வைத்தியசாலையினால் சுத்தமான வடிகட்டிய குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், பிளாஸ்ரிக் கோப்பைகள், குடிபானக் குழாய் போன்றவற்றின் பாவனையை முடியுமான வரை குறைத்து நீர் வடிகட்டிகள், மட்பாத்திரங்கள், கண்ணாடிப் பாத்திரங்கள், செராமிக் கோப்பைகளை பாவிக்கவும்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி தொடக்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் அடுத்த வாரம் தொடக்கம் பொதுமக்களது பொதிகள் யாவும் பரிசோதிக்கப்பட்டு அறிவுத்தப்படுவார்கள் என வைத்தியசாலைப் பணிப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.